Home » Reviews » அனேகன் – விமர்சனம்
அனேகன் – விமர்சனம்

அனேகன் – விமர்சனம்

தனுஷின் கடைசி படமான வேலையில்லா பட்டதாரி அமோக வெற்றி, கே.வி.ஆனந்தின் கடந்த படம் ‘மாற்றான்’ படுதோல்வி. இப்படி இரண்டு பேரும் இணையும் ஒரு படத்துக்கு எதிர்பார்ப்பு எப்படி இருக்கும். அத்தோடு நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் கலக்க வந்தால் உச்சகட்ட எதிர்பார்ப்பு தான், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த்தா? இந்த படம்? பார்ப்போம்.

படத்தின் கதைப்படி, கார்த்திக் நடத்தும் வீடியோ கேம்ஸ் உருவாக்கும் ஐடி கம்பெனியில், வித்தியாசமான வீடியோ கேம்களை உருவாக்குவதற்காக ஒரு குழுவை அமைத்து அதில், பணிபுரியும் அனைவருக்கும் கற்பனைத் திறன் நன்றாக வரவேண்டும் என்பதற்காக ஒருவித மாத்திரை கொடுக்கப்படுகிறது. நாயகி அமிராவும் அந்த குழுவில் ஒருவர். அந்த மாத்திரையை சாப்பிடுபவர்கள் மனதுக்குள் எழும் கற்பனைக் கதையை தனது வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி லாபம் பார்க்கிறார் கார்த்திக்.

இந்த நிகழ்வில் அமிராவிற்கு அவளது முன்ஜென்ம வாழ்க்கை அவளது கண்முன் விரிகிறது. அந்த முன்ஜென்மத்தில் பர்மாவில் தனுஷும், அம்ரியாவும் காதலர்கள். அதில் ஏற்படும் பிரச்சினையில் இருவரும் ஒன்று சேர முடியாமல் போகிறது.

அடுத்த ஜென்மத்திலும் தனுஷும், அமிராவும் காதலித்து இணையும் நிலையில் செல்வந்தர் ஒருவரால் இருவரும் கொலை செய்யப்பட அங்கும் ஒன்று சேர முடியவில்லை.

அடுத்து, நிகழ்காலத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். முடிவிலாவது ஒன்று சேர்கிறார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

இப்படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். தனுஷின் நடிப்புக்கு இந்த படம் சரியான தீனி. காளியாக ரசிகர்களை கவரும் இவர், முருகப்பாவாகவும் கவனம் ஈர்க்கிறார். கார்த்திக் போல அவர் பேசும் வசனங்களில் அப்ளாஸ். பாடி லாங்குவேஜிலும், சண்டை காட்சிகளிலும் மெனக்கெட்டிருக்கிறார்.

அமிரா தஸ்தர், பள்ளி மாணவியாக, மாடர்ன் ஐடி பெண்ணாக, சமூக சேவை செய்யும் கல்யாணியாக அசத்தலாக நடித்திருக்கிறார். பாட்டுக்கு ஆடிவிட்டுப் போகும் நாயகிகளுக்கு மத்தியில் முதல் படத்திலேயே ‘அனேகன்’ மாதிரி படம் கிடைத்திருப்பது வரம். இவரைச் சுற்றியே கதை நகர்வதால், அழகு பதுமையாக மட்டும் இல்லாமல் நடிப்பிலும் தனது திறமையை காட்டியிருக்கிறார்.

முதல் பாதியில் கார்த்திக்கின் நடிப்பில் இளமை துள்ளல், இரண்டாம் பாதியில் மிரட்டலான நடிப்பு. இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் என்பதில் சந்தேகமில்லை.

ஐஸ்வர்யா தேவன் திருப்புமுனையான கேரக்டரில் வந்து சிறப்பாகவும் நடித்துள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, ஜெகன் ஆகியோரும் தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர்.

பர்மா சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை. ஒவ்வொரு காட்சியிலும் டீட்டெயில் பக்கா. 80-களின் வியாசர்பாடி காட்சிகளையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். கிரணின் ஆர்ட் டைரக்ஷன் பலே.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் அழகாக இருக்கிறது. மூன்று காலங்களுக்கும் சரியாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அபாரம். டங்காமாரி பாடல் ரசிகர்களுக்கு தீனி. டங்காமாரி மற்றும் ரோஜா கடலே பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டுகிறது. பின்னணி இசையிலும் பட்டைய கிளப்புகிறார்.

சுபாவின் திரைக்கதையும், வசனமும் பட்த்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. குழப்பமான கதை அமைப்பு இருந்தாலும் ரசிகர்கள் ரசிக்கும் படமாக இருக்கிறது அனேகன். முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு இப்படி ஒரு பரபரப்பான திரைக்கதையை அமைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் கே.வி.ஆன்ந்த்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply