Home » Reviews » லிங்கா – விமர்சனம்
லிங்கா – விமர்சனம்

லிங்கா – விமர்சனம்

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளே ஆகிவிட்டன தலைவரை திரையில் பார்த்து, இது தான் ரஜினி ரசிகர்களின் ஏக்கமாக இருந்து வந்தது. அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவும் உடல்நிலை சரியான பிறகு ரஜினி நடித்திருக்கும் படம் தான் ‘லிங்கா’. ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆறே மாதத்தில் இவ்வளவு பிரமாண்டமான படத்தை முடித்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சரி லிங்கா படத்தை முதல் காட்சியில் பார்த்த ரசிகர்களின் மனநிலை என்ன?? இதோ!!

படத்தின் கதைப்படி, ராஜா லிங்கேஸ்வரன் பிரிட்டிஷ் காலத்தில் வேலை செய்யும் ஒரு கலெக்டர், எஞ்சினியர். சோலையூருக்கு வரும் லிங்கேஸ்வரன் அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அணை கட்ட தீர்மானிக்கிறார். பிரிட்டிஷ் அரசு அனுமதி மறுக்க, கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து விட்டு கிளம்புகிறார். தனது சொந்த பணத்தில் ஊர் மக்களின் துணையோடு அணை கட்ட ஆரம்பிக்கிறார். சதிவலை பின்னி அதில் லிங்கேஸ்வரனை வீழ்த்தி, ஊர் மக்களே அவரை ஊரை விட்டு துரத்தி விடுகிறார்கள். அணைக்கு அருகில் அவர் கட்டிய கோவிலையும் மூடி விடுகிறார்கள். பின் உண்மை நிலை தெரியும் போது அவரை தேடி கண்டுபிடித்து வருந்துகிறார்கள். லிங்கேஸ்வரனை ஊருக்கு அழைக்கிறார்கள். அவர் மறுத்து விடுகிறார்.

அவரின் பேரனை வைத்து அந்த கோவிலை திறக்க முயற்சிக்கிறார்கள். அவர் தான் இளமை பொங்கும் திருடன் ரஜினி. அவர் அந்த ஊருக்கு வந்தாரா? அந்த ஊரில் அணைக்கு வந்த ஆபத்தில் இருந்து மக்களையும், அணையையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் முக்கிய அம்சங்கள் மூன்று சொல்ல வேண்டுமானால் ரஜினி, ரஜினி, ரஜினி. இரண்டு வேடங்களில் ரஜினி. நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு தொழில் செய்யும் ரஜினி அடிக்கும் கூத்துக்கள், அல்டிமேட. இளம் கதாநாயகர்கள் செய்யும் சேட்டைகள். இன்னொரு ரஜினி கம்பீரமான கலெக்டர் ராஜா லிங்கேஸ்வரன். அவரின் அறிமுக காட்சியே, ரசிகர்கள் பாணியில் சொல்லபோனால் ‘மரண மாஸ்’. அதன்பின் ஊர் மக்களை ஒன்று திரட்டும் காட்சிகளாகட்டும், அவர் பேசும் வசனங்கள் என ஒவ்வொன்றும் அல்டிமேட் மாஸ். அந்த ரயில் சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு பெருந்தீனி. நிறைய செண்டிமெண்ட் காட்சிகளும் கூடவே. வேஷ்டி சட்டை, கோட் சூட் என அத்தனையிலும் மனிதர் அசத்துகிறார். கலகல ரஜினி முதல் பாதி. கம்பீர ரஜினி இரண்டாம் பாதி.

அனுஷ்கா மாடர்ன் கேரக்டரில் டிவி ரிபோர்டராக நடித்திருக்கிறார். மோனா காசோலினா பாடல் சூப்பர். சோனாக்ஷி சின்ஹா கலெக்டர் ரஜினிக்கு உதவி செய்யும் கேரக்டரில் நடித்து அவருக்கே ஜோடியாகிறார். ஜாக்கெட் அணியாமல் பழங்கால பெண்களோடு பெண்ணாகிறார்.

ரஜினியின் நண்பர்களாக சந்தானம், கருணாகரன், தாடி பாலாஜி, குண்டு பாலாஜி. கருணாகரன் வாய்ப்புக்கள் குறைவு. சந்தானம் ரஜினியோடு சேர்ந்து அசால்ட்டாக ஸ்கோர் பண்ணுகிறார். ரஜினியையும் பல இடங்களில் கலாய்க்கிறார். முதல் பாதி கலகலப்புக்கு சந்தானத்தின் பங்கும் முக்கியமானது.

வில்லனாக ஜகபதி பாபு. புரட்சியாளராக தேவ் கில். ஒன் மேன் ஷோ என்பதாலேயே வில்லன்களுக்கு ஸ்கோப் குறைவு தான். ராதாரவி, விஜயகுமார், அனுமோகன், சுந்தர்ராஜன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

எடிட்டிங் சம்ஜித். கொஞ்சம் வேகத்தை கூட்டியிருக்கலாமே என்று சொல்ல தோணுகிறது. ரத்னவேல் ஒளிப்பதிவில் பறந்து விரிந்த அணையின் பிரமாண்டமும், ஒபெனிங் பாடல் காட்சியின் பிரமாண்டமும், மக்கள் மிகுந்த அந்த 194௦-களும் ஒரு அமேசிங் அனுபவம்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் சூப்பர். மோனா காசோலினா பாடலும், ஓ நண்பா பாடலும் தியேட்டரில் ஆட்டம் போட வைக்கிறது. இந்தியனே வா எழுச்சி ரகம். பின்னணி இசையில் நிறைய எமோஷனல் மொமென்ட்ஸ்.

பொன் குமரனின் கதை வழக்கமான பழைய படங்களின் பாதிப்பு இருந்தாலும், அணையை மையப்படுத்திய கதையோட்டமும், பிரிட்டிஷ் காலமும் புதுமை. ரஜினியின் வசனங்கள் ஒவ்வொன்றும் தியேட்டரில் அப்ளாசை அள்ளுகின்றன. முத்து, படையப்பாவில் பார்த்த ரஜினிக்கும் இதில் பார்க்கும் ரஜினிக்கும் வித்தியாசம் நிறைய. ஆனாலும் ஒட்டு மொத்த படத்தையும் சுமப்பது ரஜினி என்ற பிரமாண்ட ஆளுமை தான். படையப்பா போல முழுக்க ஆக்ஷன் படமாக இல்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளால் படம் நகர்வது ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம்.

ஆனாலென்ன!! “இது தலைவர் படம், அவரு வந்தா மட்டும் போதும்” என்பதே படம் பார்த்த ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்து.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply