Home » Reviews » திருட்டு பயலே 2 – விமர்சனம்
திருட்டு பயலே 2 – விமர்சனம்

திருட்டு பயலே 2 – விமர்சனம்

கந்தசாமி படத்துக்கு பிறகு தமிழில் எந்த படத்தையும் இயக்காத சுசி கணேசன், 8 வருடங்களுக்கு பிறகு தன் கேரியரின் மிகப்பெரிய வெற்றிப்படமான திருட்டு பயலே படத்தின் இரண்டாம் பாகத்துடன் திரும்ப வந்திருக்கிறார். வேறு கதாபாத்திரங்களை வைத்து, வேறு கதைக்களத்தில் நடக்கும் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார். எந்த காலத்துக்கும் பொருத்தமான டிஜிட்டல் யுக திருட்டுபயலேவை இந்த பாகத்தில் கொடுத்திருக்கிறார். வெற்றி பெறுமா? பார்ப்போம்.

படத்தின் கதைப்படி, நேர்மையான காவல்துறை அதிகாரியான பாபி சிம்ஹாவிடம், முக்கிய புள்ளிகளின் போன் கால்களை ஒட்டுக் கேட்டு ரிப்போர்ட் கொடுக்கும் பணியை கொடுக்கிறார் உயர் அதிகாரி. நேர்மையாக இருந்து, அதனால் கிடைத்த டிரான்ஸ்பர்களால் வெறுத்து போன பாபி சிம்ஹா, ஒரு கட்டத்தில் 50 கோடி பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். அமைச்சரின் போன் காலை ஒட்டுக் கேட்டு, அவரிடம் இருந்து 10 கோடி பணத்தை திருடி விடுகிறார். இது போல ஒரு சில பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார். அந்த பணத்தை எல்லாம் ஒரு பினாமியின் பேரில் சேர்த்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் வீட்டிலேயே பேஸ்புக்கே கதியென இருக்கும் அவரது மனைவி அமலா பால், பெண் பித்தன் பிரசன்னாவுடன் போனில் பேசி வருவது தெரிகிறது. அதிர்ச்சியடையும் பாபி சிம்ஹா, பிரசன்னாவை தனது சில செயல்கள் மூலம் எச்சரிக்கிறார். இது பிரசன்னாவுக்கும் தெரிய, இருவரும் மோதுகிறார்கள். மோதலில் யார் வென்றது? 50 கோடி சம்பாதித்தாரா? அமலா பால் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா தன் கதாபாத்திரத்தின் தன்மைகளை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். திருட்டு தனம் செய்வதாகட்டும், மனைவியுடன் காதல் காட்சிகள் ஆகட்டும், போன் கால்களை ஒட்டுக் கேட்கும் காட்சியாகட்டும் சிறப்பு.

பாபி சிம்ஹாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் பிரசன்னா மிரட்டுகிறார். அவரது தாடி வைத்த ஹைடெக் வில்லத்தனம் பயமுறுத்துகிறது. பெண்களுடன் கடலை போடும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

விளம்பரங்களில் பார்த்தது போல் அல்லாமல் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அமலா பால். பேஸ்புக்கே கதி என கிடக்கும் வீட்டுப் பெண்களை பிரதிபலித்திருக்கிறார் அமலாபால். எம்.எஸ்.பாஸ்கர், பிரதீப், நயனா, சுசி கணேசன், முத்துராமன் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்யாசாகரின் இசையில் நீண்ட நாள், திருட்டு பயலே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் கவனத்தோடு வேலை செய்திருக்கிறார். செல்லதுரை ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தை பற்றி அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். ஆங்காங்க்கே வரும் வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதி படத்தை ரசிக்க வைக்கிறார். இந்த காலத்துக்கு தேவையான சமூக கருத்துக்களோடு படத்தை கொடுத்ததற்கு சுசி கணேசனுக்கு பாராட்டுக்கள்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply